கொரோனா வைரஸ் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை நாள்தோறும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
5.66 லட்சம் பேருக்கு தொற்று
நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 18,522 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 16,893 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 883 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மீண்டும் 2-ம் இடத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 86 ஆயிரத்து 224 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
சீனாவை முந்தியது தமிழகம்
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் 83 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. சீன அரசின் கடுமையான நடவடிக்கைகளால் அந்த நாட்டில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வைரஸ் பாதிப்பை ஒப்பிடும்போது மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் சீனாவைத் தாண்டி சென்றுள்ளன.
உலகளாவிய அளவிலான வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.