மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

இதன்பிறகு 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 3-ம், 4-ம் கட்ட ஊரடங்கின்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நான்காம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31-ம் தேதி நிறைவடைந்தது. அப்போது ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி ஊரடங்கு அமல்படுத்துவது, விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா, டெல்லியைத் தொடர்ந்து தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 82 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

எனினும் மளிகை, காய்கறி, பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நாளை நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுமார் 2 மணி நேரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
சென்னையை போன்று பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

குறிப்பாக திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிப்பது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

சென்னையில் மருத்துவ முகாம்களை அமைத்து காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து விரைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஊரடங்கை அமல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *