கொரோனா வைரஸ்.. மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்… அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி எம்.ஆர்.ஷா கூறும்போது, “குஜராத்தில் என்ன நடக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி அசோக் பூஷண் கூறும்போது, “கடந்த 2 வாரங்களாக டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது.
டெல்லியில் தற்போதைய நிலை குறித்து மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
டெல்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறும்போது, “டெல்லியின் 115 மருத்துவமனைகளில் 80 சதவீத படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியின் தற்போதைய நிலவரம் மோசமாக இருக்கிறது என்பது உண்மைதான். வைரஸ் பரவலை தடுக்க டெல்லி அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
அனைத்து தரப்பு விளக்கங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
“கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் டெல்லி, குஜராத் மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குஜராத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் திருமண விழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது ஏன் என்பது புரியவில்லை.
நாடு முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு மனிதாபிமானத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகங்கள் கண்ணியத்துடன் கையாள வேண்டும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 2 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.