சாத்தான்குளம் எப்ஐஆரை காட்டி கொடுத்த சிசிடிவி

சாத்தான்குளம் என்ற பெயர் உலகளவில் ட்ரெண்ட்டாகிவிட்டது. தமிழக காவல் துறையினரை நெட்டிசன்களுக்கு வறுத்தெடுத்து வரும் நேரத்தில் இன்னும் அதிர்ச்சியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆருக்கும் நடந்த சம்பவத்துக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக சிசிடிவி கேமரா பதிவுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

தந்தை, மகன் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். மரக்கடை வைத்துள்ளார். இவரின் மகன் பென்னிக்ஸ் (31). செல்போன் கடை நடத்திவந்தார். இவர்கள் இருவரும் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். பின்னர் இருவரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சப்-ஜெயலில் அடைத்தனர். சிறையில் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்து ஜெயராஜ் இறந்தார். அடுத்தடுத்து இருவரும் இறந்த சம்பவம் சாத்தான்குளம் வியாபாரிகள் கொந்தளித்தனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதிகேட்டு சாத்தான்குளம் வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். கொரோனா ஊரடங்கிலும் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவளித்தனர். தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. சமூகவலைதளங்களில் ஜெயராஜ், பென்னிக்ஸ் புகைப்படங்களுடன் செய்திகள் ட்ரெண்ட்டாகின. இது ஆளுங்கட்சியினருக்கும் தமிழக காவல் துறையினருக்கும் அடுத்தடுத்து சிக்கல்களை ஏற்படுத்தின.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

தூத்துக்குடி எம்.பியான கனிமொழி, பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, தி.மு.க இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என அரசியல் கட்சி நிர்வாகிகள் சாத்தான்குளத்துக்கு முகாமிட்டனர். சாத்தான்குளம் சம்பவத்தையொட்டி ஆளுங்கட்சியினரை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். அதனால், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்ததோடு இரங்கலையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தார். அதனால் அ.தி.மு.க. சார்பிலும் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் கனிமொழி எம்.பி.

கனிமொழி எம்.பியைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்களைக் கூறினார். கொரோனா கொடூரத்தை விட சாத்தான்குளம் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதனால் சாத்தான்குளம் சம்பவத்தை கையில் சிபிஐ எடுத்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாக தொடங்கியுள்ளது.

முதல் தகவல் அறிக்கை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் நிஜத்தில் நடந்த சம்பவங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளதை சிசிடிவி கேமரா பதிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. எப்ஐஆரில் வியாபாரிகள் ஜெயராஜிம் பென்னிக்ஸிம் போலீஸாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் தரையில் புரண்டதால் ஊமைகாயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பென்னிக்ஸ், ஜெயராஜ் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், போலீஸார், கடையின் முன் நின்றப்படி ஜெயராஜிடம் பேசும் காட்சிகள் உள்ளன. அதன்பிறகு காவல் நிலையத்துக்கு ஜெயராஜ் தனியாகச் செல்கிறார். அடுத்து போலீசார் சென்ற பிறகு நண்பரின் பைக்கில் பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்கு செல்கிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் கடைகள் மட்டுமல்லாமல் அந்தப்பகுதியில் மற்ற கடைகளும் திறந்திருக்கின்றன.

எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது போல அங்கு எந்தவித வாக்குவாதமும் நடைபெறவில்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுப்படுத்தியுள்ளன. அதனால் சாத்தான்குளம் எப்ஐஆர் பதிவு செய்த நேரத்தில் ஜெயராஜ் கடை முன் எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இந்த சிசிடிவி காட்சிகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாராமாக மாறியுள்ளது. இது, சாத்தான்குளம் போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கோவில்பட்டி சிறைத்துறை ஆவணங்களும் கோவில்பட்டி அரசு மருத்துவரும் அளித்த வாக்குமூலமும் இந்த வழக்கின் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையில் சாத்தான்குளம் போலீசாரை கூண்டோடு மாற்றிய தூத்துக்குடி எஸ்.பி, புதியதாக 27 பேரை நியமனம் செய்துள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியில் வரத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *