தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்த ஜெயராஜ், செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உயர் நீதிமன்றத்தில் விசாரணை
தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த சென்றார். அப்போது குறிப்பிட்ட சில ஆவணங்களை தருமாறு போலீஸாரிடம் மாஜிஸ்திரேட் கேட்டுள்ளார். ஆனால் அவரை போலீஸார் அவமரியாதை செய்துள்ளனர்.
மாஜிஸ்திரேட் அறிக்கை
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு சாத்தான்குளம் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 28-ம் தேதி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் பிரதாபன் இருந்தனர். இருவரும் மிரட்டும் தொனியில் பேசினர். பொது குறிப்பேடு, இதர பதிவேடுகளை கேட்டபோது உடனடியாக சமர்ப்பிக்கவில்லை.
போலீஸ் நிலைய சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தபோது, அந்த பதிவுகள் தானாக அழிந்துபோகும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது. கடந்த 19-ம் தேதி முதலான காணொலி பதிவுகள் இல்லை. காவலர் மகாராஜாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பதில் அளிக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்துக்கு வெளியே காவலர்கள், அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர். இதனால் சாட்சிகள் பதற்றம் அடைந்தனர்.
லத்தி எங்கே?
ஜெயராஜ், பென்னிக்ஸை அடிக்க பயன்படுத்திய லத்திகளை கொண்டு வரும்படி கூறினேன். போலீஸார் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. காவலர் மகாராஜன் என்பவர், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று என் முதுகுக்கு பின்னால் என் காதில் விழும்படி பேசினார்.
லத்திகளை கேட்டபோது மகாராஜன் முரணாகப் பேசினார். தனக்கு லத்தி கிடையாது என்று கூறிவிட்டார். லத்தி குறித்து மற்றொரு காவலரிடம் கேட்டபோது, அவர் தப்பியோடிவிட்டார்.
இவ்வாறு மாஜிஸ்திரேட் தனது எழுத்துபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.