சென்னையில் வங்கி மேலாளர் தற்கொலை – திருமணமாகி ஓராண்டுக்குள் விபரீத முடிவு எடுத்தது ஏன்?

சென்னையில் ஊரடங்கில் வங்கி மேலாளர் இரவு பகலும் என பாராமல் வேலைப்பார்த்தால் மனவிரக்தியில் தற்கொலை செய்துள்ளார். திருமணமாகி ஓராண்டுக்குள் இந்த சோகம் நடந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலை உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஹரிகணேஷ். வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி திவ்யா என்கிற திவ்யதர்ஷிணி (25). ஹரிகணேஷ், திவ்யாவை 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்துவந்துள்ளார்.

பின்னர், இருவீட்டினரின் சம்மதத்தின்பேரில் 2019-ம் ஆண்டு மே மாதம் ஊட்டியில் திருமணம் நடந்துள்ளது. திவ்யா, தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திவ்யா வீட்டிலிருந்தப்படியே மூன்று மாதங்களாக அலுவலக வேலையைப் பார்த்துவந்துள்ளார். அப்போது இரவு பகல் என மாறி மாறி வேலை பார்த்த திவ்யா மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் 30-ம் தேதி திவ்யாவின் அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை தட்டியுள்ளார். ஆனால் திவ்யா காவை திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது திவ்யா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

அதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகணேஷ், ஊட்டியிலிருக்கும் திவ்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக திவ்யாவின் அம்மா மாலதி, சென்னையிலிருக்கும் அவரின் சித்தப்பா கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் திவ்யா வீட்டுக்குச் சென்றார்.

திவ்யா மரணம் குறித்து கிருஷ்ணமூர்த்தி, கே.கே நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார். திவ்யாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “திவ்யா, ஹரிகணேஷ் ஆகிய இருவருக்கும் சொந்த ஊர் ஊட்டி. இருவரும் வங்கியில் வேலைப்பார்த்து வந்துள்ளனர். ஓரே ஊர், ஓரே வேலை என்பதால் இருவரும் பழகியுள்ளனர். பின்னர் காதலித்துள்ளனர்.

இந்தச் சமயத்தில் ஊரடங்கில் வீட்டிலிருந்த வேலைப்பார்த்த திவ்யாவுக்கு கடும் வேலைப்பளூ இருந்துள்ளதாக ஹரிகணேஷ் விசாரணையின் போது தெரிவித்தார். திவ்யாவின் அறையை ஆய்வு செய்த போது எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. அதனால் அவரின் செல்போனை ஆய்வு செய்துவருகிறோம். ஆர்.டி.ஓ அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஊரடங்கு நேரத்தில் வேலைப்பளூ காரணமாக வங்கி மேலாளர் திவ்யா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *