தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த மார்ச் 24-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உறுதி அளித்தது.
இதனிடையே கொரோனா ஊரடங்கிலும் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமை வகித்தார். தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஜூலை 8-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார். அதனால் திட்டமிட்டப்படி ஜூலை 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.