கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தபோது இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
லடாக் எல்லை பிரச்சினை
இதன்பின் கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
சீன வீரர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கியதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிரடி தடை
கடந்த 22-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சவார்த்தையில் எல்லையில் பரஸ்பரம் படைகளை வாபஸ் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
எனினும் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் வீரர்களையும் ஆயுதங்களையும் பெருமளவில் குவித்து வருவதால் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர்.
இந்நிலையில் டிக்டாக், யுசி புரவுசர் உட்பட 50 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் செயல்படவில்லை.
