தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 86 ஆயிரத்து 224 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 19-ம் தேதி முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது.

ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் முழுஊரடங்கு


இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பின் சுருக்கம் வருமாறு:
தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல் செய்யப்படும். எனினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.


ஜூலை 5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல் செய்யப்படும்.

மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து ஜூலை 15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.அந்தந்த மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம்.

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம். முழுஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் ஜூலை 5-ம் தேதி வரை செல்லும்.

ஜூலை 6-க்கு பிறகு தளர்வு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அமல் செய்யப்படும். இதன்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகபட்சம் 80 ஊழியர்களுடன் செயல்படலாம். அந்த ஊழியர்களுக்கு நிர்வாகவே வாகன வசதியை செய்து கொடுக்க வேண்டும்.


வணிக வளாகங்கள் தவிர்த்து இதர ஷோரூம்கள், ஜவுளி, நகை கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

கடைகளில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
தேநீர் கடைகள், உணவகங்கள், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படும்.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணம் செய்யலாம். முடிதிருத்தகம், அழகு நிலையங்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம்.

வழிபாட்டுத் தலங்களில் தரிசனம்


சென்னை தவிர இதர மாவட்டங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் சில தளர்வுகள் அமல் செய்யப்படும். இதன்படி ரூ.10,000-க்கு குறைவான வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.

எனினும் வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
மீன், கோழி, இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.

இணையதள வணிக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விற்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *