தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 3,943 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்பியவர்கள். சட்டீஸ்கரில் இருந்து வந்த 30 பேருக்கும் கர்நாடகாவில் இருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
90,167 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 58,237 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 90,167 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 1,201 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 50,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38,889 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.