திருப்பூரில் குக்கரால் அடித்து மனைவியை கொலை செய்த கணவர்

திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய் நகரைச் சேர்ந்தவர் சுல்தான்முகமது. இவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான், மணியகாரம்பாளையத்தில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி சுமையா பானு என்ற மனைவியும் 3 மகள்கள், சலாவுதீன் (18) என்ற மகன் உள்ளனர்.

முதல் திருமணம்

மூத்த மகள் நிஷாபானு (26). பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே (கடந்த 2013-ம் ஆண்டு) மேட்டுபாளையத்தைச் சேர்ந்த நௌசாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

4 மாதம் கர்ப்பமாக இருக்கும்போதே எனது மகள் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். எனது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரது கணவருடன் சேர்ந்து வாழாததால் கடந்த 2015-ம் வருடம் எங்களது இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்து விட்டோம்.

2-வது திருமணம்


கடந்த 2016-ம் வருடம் மெடிக்கல் கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் தமிழ்மணி என்கிற அப்துல் சமத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். அவர்கள் இருவரும் காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு சக்தி காம்பவுண்ட்ல் தனியாக குடித்தனம் செய்து வந்தனர். அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் ஆன கொஞ்ச நாளிலிருந்தே மருமகன் சரிவர வேலைக்கு போகாமல் எனது மகளிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார். அப்பா வீட்டில் போய் பணம் வாங்கி வா, தனியாக தொழில் செய்ய வேண்டும், இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி கொடுமைபடுத்தி வந்துள்ளார். நாங்களும் அவ்வப்போது பணம் கொடுத்து வந்தோம்.

கொரோனாவால் வேலையிழப்பு


கடந்த 3 மாத காலமாக கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்த அப்துல் சமத் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மங்களம் ரோட்டில் வேலைக்குப் போவதாக கூறினார். வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். அதனால் எனது மகள், குழந்தையுடன் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி கொள்வார்.

எனது மருமகன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் என் மகளிடம் என்னால் இனிமேல் வேலைக்கு எல்லாம் போக முடியாது. உங்க அப்பாவிடம் பணம் வாங்கிட்டு வா. நான் சொந்தமாக தொழில் செய்யணும் என அடித்து துன்புறுத்தினார். நாங்களும் கொஞ்சநாள் கழித்து ஏதாவது பணம் கொடுத்து உதவலாம் என்று இருந்தோம்.

மருமகன் தப்பியோட்டம்


கடந்த 28-ம் தேதி மதியம் 2 மணிக்கு மகள் நிஷாபானுவும், பேரனும் சத்யா நகரில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இரவு 8 மணியளவில் பேரனிடம் பேசுவதற்காக எனது மகளுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன். செல்போனை யாரும் எடுக்கவில்லை. உடனடியாக நானும் எனது மகன் சலாவுதீனும் இரவு 10.30 மணியளவில் சத்யா நகரில் உள்ள மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றோம். மகளின் வீட்டின் கதவை தட்டியபோது எனது மருமகன் கதவை திறந்து வெளியில் வந்தார்.
வீட்டின் முன் எரிந்து கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் பார்த்தபோது அவரது சட்டை வேட்டி எல்லாம் ரத்தக்கறையாக இருந்தது. எங்களைப் பார்த்ததும் அவர் தப்பியோடிவிட்டார். நானும் எனது மகனும் பதறிபோய் உள்ளே சென்று பார்த்தபோது எனது மகள் நிஷாபானு பெட்ரூமில் கழுத்தில் ரத்தகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எனது மகள் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. எனது மகளைக் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தமிழ்மணி என்கிற அப்துல் சமத் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் சமத் கைது


இதன்பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார், தமிழ்மணி என்கிற அப்துல் சமதை (30) கைது செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், மனைவி மீதான சந்தேகத்தில் அவரை கொலை செய்ததாக அப்துல் சமத் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *