கேரளாவை சேர்ந்த பூர்ணா என்ற ஷாம்னா காசிம் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாண்டு’ திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
திருமண நாடகம்
சில வாரங்களுக்கு முன்பு ஒரு தரப்பினர் பூர்ணா குடும்பத்தை அணுகினர்.கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு மணப்பெண் தேடுவதாகவும் நடிகை பூர்ணாவை திருமணம் செய்ய தொழிலதிபர் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இதன்பின் இரு குடும்பத்தினரும் நெருங்கிப் பழகினர். எனினும் தொழிலதிபர் தரப்பு நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமண பேச்சுவார்த்தையை பூர்ணா குடும்பத்தினர் முறித்துக் கொண்டனர்.
நடிகை கடத்தல்
இதைத் தொடர்ந்து, பெண் கேட்டு வந்த தரப்பு பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. நடிகையை கடத்தி ஒரு வாரம் பிணைக்கைதியாக வைத்திருந்ததாகவும் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பூர்ணா குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் கேரள போலீஸார் முகமது ஷெரீப், ரபீக் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஒப்பனை கலைஞர் ஹரீஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
மணமகன் வீட்டு தரப்பினரை இவர்தான், நடிகை குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஹரீஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாடல் அழகி மறுப்பு
நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பல், தென்னிந்தியாவை சேர்ந்த பல்வேறு நடிகைகளை கடத்தி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கும்பலுடன் கேரளாவை சேர்ந்த மாடல் அழகி மீராவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனை அவர் மறுத்துள்ளார். என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. போலீஸாரிடம் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளேன் என்று தெரிவித்தார்.