கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளோம். ஆரம்ப காலத்தில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை 20 விநாடிகள் சோப்பு போட்டு கழுவுவது ஆகிய பழக்க, வழக்கங்களை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றினர். தற்போது தனிநபர், சமூக அளவில் அலட்சியம் அதிகரித்து வருகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
80 கோடி பேருக்கு பலன்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகளை மாவட்ட நிர்வாகங்கள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஊராட்சி தலைவர் அல்லது பிரதமர் யாராக இருந்தாலும் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் கிடையாது.
கடந்த 3 மாதங்களில் சுமார் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரேஷனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ பருப்பும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
1.5 லட்சம் கோடி செலவு
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 5 மாதங்கள் 80 கோடி மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.90,000 கோடி செலவிடப்படும். கடந்த 3 மாதங்களையும் கணக்கிட்டால் செலவுத் தொகை ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டிவிடும். ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது. டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் சீனா குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் சீனா குறித்து எதுவும் பேசவில்லை.