நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடைபெறுமா?

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.
வரும் 26-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வரும் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஜேஇஇ நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மகாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் சேவைகள் இதுவரை இயக்கப்படவில்லை. பேருந்து, பயணிகள் வாகன சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட வழிகாட்டு நெறிகளில் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வை எவ்வாறு நடத்த முடியும் என்று கல்வியாளர்கள், பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மத்திய மனித வள அமைச்சகத்துக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் விரைந்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *