தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், எட்டயபுரம் மற்றும் வி.கே. புதூர் ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மரணமடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
வீடியோ
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணைக்கு அழைத்துவருபவர்களை கடிந்துகூட பேசக்கூடாது, அவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளார்.
இதில் இன்னும் ஒருபடி மேலே சென்ற கூடுதல் டிஜிபி ரவி, பொதுமக்களே எஜமானர்கள்.
ஒருவரை நீங்கள் அடித்தால் ஓட்டுமொத்த மக்களும் உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள் என்று வீடியோ வெளியிட்டார்.
தமிழக டி.ஜி.பி திரிபாதி, காவல் நிலையங்களுக்கு இனி யாரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்லக்கூடாது என சுற்றறிக்கையை வெளியிட்டார்.
இந்தச் சூழலில் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் போலீஸாருக்கும் இளைஞர் ஒருவருக்கும் நடந்த மல்லுக்கட்டு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை போலீஸார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகின்றனர்.
ஆனால் அந்த இளைஞரோ நான் ஏன் காவல் நிலையம் வர வேண்டும் என ஆவேசமாக வீர வசனம் பேசுகிறார்.
இந்தக் காட்சியை அவ்வழியாக சென்றவர்களும் போலீஸாரும் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள், போலீஸாரை வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
மல்லுக்கட்டிய இளைஞர்
ஊரடங்கு காரணமாக சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் சில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போதை இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
மேலும் அவர் என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்று கூறியபடி அவ்வழியாக அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு சென்ற பெண் மருத்துவரின் அடையாள அட்டையை பிடித்து இழுக்க முயன்றார்.
அதனால்தான் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றோம். ஆனால் அவர் பிடிவாதம் செய்து எங்களுடன் மல்லுகட்டினார். அதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிட்டனர்.
என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
விசாரணைக்குப்பிறகு அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.