அரசு நிலங்கள், அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களை வெட்டவும், அப்புறப்படுத்தவும் உரிய அனுமதி வழங்க பசுமைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசு சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில பசுமைக் குழுவில் வனத்துறை செயலர், தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலா, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகளை சேர்ந்த செயலாளர்கள், தமிழக டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இதேபோல மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைக் குழுக்களின் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். 3 மாதங்களுக்கு ஒருமுறை மாநில, மாவட்ட பசுமைக் குழுக்கள் கூடி திட்டங்களை வகுக்கும். வனப்பரப்பை அதிகரித்தல், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த குழு ஆலோசனைகளை வழங்கும் என்று தமிழக வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.