முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய வணிகவரித்துறை சங்கம்

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையின்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தப்படி உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வணிக வரிப் பணியாளர் சங்கம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வணிகவரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் வரி வருவாயைப் பெருக்கும் வகையில் வணிக வரித் துறையில் மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்படும். 100 சுற்றும் குழு உருவாக்கப்படும். புதிதாக ஏழு நிர்வாகக் கோட்டங்களும், ஆறு நுண்ணறிவுப் பிரிவும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மூர்த்தியை சங்க நிர்வாகிகள் சந்தித்த போது அறிவிப்பினை நடைமுறைப்படுத்த அனைத்து நிலைகளிலும் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். தற்போது உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்களை துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அதற்கான ஊதியத்துடன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நிதி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வணிகவரித் துறை வரலாற்றில் 1000 பேருக்கு பதவி உயர்வு என்பது இதுதான் முதல் முறை. பதவி உயர்வு கானல் நீராய் இருந்த துறையில் பணியாளர்களின் கனவை நனவாக்கி காட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்திக்கும் வணிகவரித் துறையின் சார்பாகவும், பதவி உயர்வு பெற உள்ள ஊழியர்கள் சார்பாகவும், எங்களது சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிந்துக் கொள்கிறோம். இனி கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றி அரசின் வரி வருவாயைப் பெருக்க 100℅ அப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவோம்.

அதே போல் துறையின் வளர்ச்சிக்கும், வருவாய் பெருக்கத்திற்கும் அதிகாரப் பகிர்வை பரவலாக்க, சமன் செய்ய துணை மாநில வரி அலுவலர் மற்றும் மாநில வரி அலுவலர் நிலையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *