வெள்ளிக்கிழமை திருடர்கள் சிக்கியது எப்படி?

சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக புகார் ஒன்று வந்தது. அந்தப் புகாரை அளித்த பெண், வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்றுவிட்டு வரும்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் செயினை பறித்து விட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அடிக்கடி நிறம் மாறிய பைக்


அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி மற்றும் எஸ்.ஐ. ரமேஷ், ஏட்டுக்கள் பலராமன், பீட்டர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவில் சிக்கிய திருடர்கள்


இந்தச் சமயத்தில் உதவி கமிஷனர் கண்ணனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது செயின் பறிப்பு கொள்ளையர்கள், கொள்ளையடிக்கும்போது வெள்ளை நிற பைக்கிலும் சிறிது நேரத்தில் அந்தப் பைக் நீல நிறத்துக்கும் மாறியதை கண்டுபிடித்தனர். அதனால் கொள்ளையர்கள் புத்திச்சாலிதனமாகவும் முன்எச்சரிக்கையாகவும் திருட்டி ஈடுபட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

கொரட்டூரில் சிக்கினர்


சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்களிடம் விசாரித்தார். இருவரும் செயின் பறிப்பு திருடர்கள் பாலு என்கிற பூபாலன் (21), பாபு (20) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்கச் செயின்கள், 3 விலை உயர்ந்த திருட்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பூபாலனும் பாபுவும் சிறையில் நண்பர்களாகி உள்ளனர். இதில் பூபாலன் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். பாபு, பெயிண்டிங் வேலை செய்துவருகிறார். அதனால் பூபாலன் பைக்குகளைத் திருடி செயின் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

பாபு, பெயிண்டர் என்பதால் சிசிடிவி கேமரா மூலம் தங்களைக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன் ஸ்பீரே மூலம் பைக்கின் கலரை மாற்றிவிடுவார். இதற்காக 150 ரூபாய்க்கு பெயிண்ட் ஸ்பீரே வைத்துள்ளார். செயின் பறிப்பில் ஈடுபட்டபிறகு பெட்ரோல் மூலம் அந்தக் கலரை மாற்றிவிடுவார். அதனால் சிசிடிவி மூலம் இவர்களை போலீசாரால் கண்டறிவதில் சிக்கல் நீடித்தது.

காதலிகளுக்கு பணம் வாரியிறைப்பு


இவர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும்போது டீ சர்ட் மற்றும் சட்டை என இரண்டையும் அணிந்துச் செல்வார்கள். செயின் பறிப்பில் ஈடுபட்டபிறகு சட்டையை கழற்றிவிட்டு டீ சர்ட்டுடன் பைக்கில் செல்வார்கள். இது எல்லாம் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க இவர்கள் இருவரும் செய்துவந்த தந்திரங்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு நேரம் என்பதால் அறுந்த செயின்களை ஆன்லைன் மூலம் விற்று வந்துள்ளனர்.

பூபாலனுக்கு அயனாவரம், வில்லிவாக்கத்தில் என 2 காதலிகள் உள்ளனர். திருட்டு செயின்களை விற்று கிடைத்த பணத்தை 2 காதலிகளுக்கும் அவர் வாரி இறைத்துள்ளார். மேலும் திருட்டு பண முதலீட்டில் மார்க்கெட்டிலும் கடை நடத்திவந்துள்ளார்.

திருமங்கலம், அண்ணாநகர் காவல் நிலையங்களில் பூபாலன், பாபு மீது ஏற்கெனவே செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் இருந்து 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளாக கைவரிசை


இருவரிடம் போலீசார் விசாரித்தபோது திருமுல்லைவாயல், சோழவரம், மீஞ்சூர், புழல், வில்லிவாக்கம், ராஜமங்களம், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை என இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். செயின் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்திய திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை கோயில்களுக்குச் செல்லும் பெண்களை பின்தொடர்ந்து கொள்ளையடித்துவந்துள்ளனர். அதனால்தான் போலீசார் இவர்களை, வெள்ளிக்கிழமை கொள்ளையர்கள் என அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *