மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸுக்கு 10 ஆண்டு சிறை

மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். தொண்டு நிறுவனம் என்று கூறி கொண்டு இவர் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வந்தார். குறிப்பாக, லஷ்கர் -இ தொய்பா என்ற அமைப்பை உருவாக்கி இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பையில் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் மூளையாக ஹபீஸ் சயீத் செயல்பட்டார். 

இதைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத்தை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள், சட்டவிரோத பண பரிமாற்றங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நிதி நடவடிக்கை செயல் குழு (எப்ஏடிஎப்) அமைப்பும், ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி அளித்தது.

ஹபீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எப்ஏடிஎப் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்த பின்னணியில் கடந்த ஜூலை மாதம் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சில வழக்குகள் தொடர்பாக லாகூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகல் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹபீஸ் சயீத் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *