வணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம்

வணிகவரித்துறையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த

ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை கோட்டத் தலைவர் கதிரவன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். வணிக வரித்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜனார்த்தனன் உதவி ஆணையர், வணிக வரி அலுவலர் மற்றும் துணை மாநில வரி அலுவலர் சங்க தலைவர் லட்சுமணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் கூறுகையில் “வணிக வரித்துறை அமைச்சர் அவர்களின் தலையீட்டின் பேரில் விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்டுள்ள பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வேலை நிறுத்தம் வரை செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறுகையில், பொதுவாக அரசு துறையில் பொது மாறுதல் என்பது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் நடக்கும் அதற்கு முக்கிய காரணம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் வழங்குவது மற்றும் மேற்குறிப்பிட்ட காலத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டால் ஒரு வேலை வெளியூர்களுக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்கள் குடும்பத்துடன் புதிய பணியிடத்துக்கு செல்லவும் குழந்தைகளை பள்ளி சேர்ப்பதற்கும் எதுவாகவே பொதுமாறுதல் வழங்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

ஜூன் மாதத்துக்கு மேல் பொதுமாறுதல் வழங்கும் பட்சத்தில் தாமதத்துக்கான உரிய காரணத்தை தெரிவித்து துறை தலைமை அரசின் மனித வள மேலாண்மைத்துறை ஒப்புதல் பெற்ற பொது மாறுதல் வழங்க வேண்டும்.

ஆனால் பொது மாறுதல் காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் நிர்வாகக் காரணம் என்ற பெயரில் 30 டிரைவர்கள் கோட்டம் விட்டு கோட்டம் மாறுதல் செய்யப்பட்டனர். தற்போது 70 மாநில வரி அலுவவர்கள், 30 துணை மாநில வரி அலுவலர்கள் பொது மக்கள் நலன்கருதி எனக்குறிப்பிட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு நிர்வாகக் காரணம் என்று சொல்லப்பட்டாலும் துறையில் லஞ்ச லாவண்யத்தில் திளைத்தவர்கள், துறையின் வருவாய் முடக்கத்துக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒருபோதும் எங்களது சங்கங்கள் துணை போகாது. அதே வேளையில் தவறு செய்தவர்களை தண்டிக்க குற்றசச்சாட்டுக்களின் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் மாறுதல் என்பது தண்டனையோ தீர்வோ ஆகாது என்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

லஞ்சம் பெற்றதாக கூறி கோட்ட மாறுதல் செய்யப்படும் அலுவலர்களோ, பணியாளர்களோ அங்கு சென்றும் அதே போன்றதொரு வேலையைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.

அனைத்து கோட்டங்களிலும் வணிகர்களுடன் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. எந்த கூட்டத்துக்கும் முறையான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. எப்படி இது சாத்தியமானது. நேர்மை என்பது மேலிருந்து கீழாக இருக்க வேண்டும்.

ஆனால் லஞ்சம் பெறுவதில் பலிகடா ஆக்கப்படுபவர்கள் கடை நிலை ஊழியர்களும் கள அலுவலர்களும் மட்டுமே என்பதை மிகுந்த வருத்தத்துடன் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

மேலும் இதுபோன்ற மாறுதல்களால் மாறுதல் பயணப்படிக்கென ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை அரசுக்கு செலவினமாக அமைய வாய்ப்புள்ளது. இது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை உருவாக்கும் என்றார்.

இது தொடர்பாக வணிகவரித்துறைச் செயலாளர் சித்திக்கை சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *