சென்னையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆல்வீனிடம் 108 சவரன் தங்க நகைகளை நம்ப வைத்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை ராயபுரம், ஜீவரத்தினம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வீன் (67). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து ஓய்வு பெ;றவர். இவர் ராயபுரம் எஸ்.என் செட்டி தெரு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைப்பது வழக்கம். அதனால் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்த மேலாளருடன் ஆல்வீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர், ஆல்வீன், தன்னிடம் உள்ள 108 சவரன் தங்க நகைகளை லாக்கரில் வைப்பது தொடர்பாக மேலாளிடம் சில மாதங்களுக்கு முன் ஆலோசனை கேட்டார். அதற்கு மேலாளர், எந்தவித கட்டணமும் இன்றி லாக்கரில் நகைகளை வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக ஆல்வீனிடம் கூறினார். அதை நம்பிய ஆல்வீன், 108 சவரன் தங்க நகைகளை லாக்கரில் வைத்தார். மேலாளர் மீமு வைத்திருந்த நம்பிக்கையால் லாக்கரின் சாவியை ஆல்வீன் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10-ம் தேதி நிதி நிறுவனத்துக்கு சென்ற ஆசிரியர் ஆல்வீன், லாக்கரில் உள்ள நகைகளை எடுக்க வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நிதிநிறுவனத்தில் ஆல்வீனுக்கு தெரிந்த மேலாளர் இல்லை. அவர் குறித்து நிதிநிறுவனத்தில் ஆல்வீன் விசாரித்தபோது அவர் பதவி உயர்வு பெற்று சென்று விட்டதாகக் கூறினர். லாக்கர் சாவியை தற்போதைய மேலாளர், ஆசிரியர் ஆல்வினிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சாவி, முன்பு அங்கு பணியாற்றிய மேலாளரிடம் இருப்பதாக ஆல்வின் கூறியிருக்கிறார். இதையடுத்து நிதி நிறுவனத்திலிருந்த இன்னொரு சாவி மூலம் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லாமல் காலியாக இருந்திருக்கிறது. அதனால் ஆல்வின் அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆல்வின் நகைகள் குறித்து விசாரித்தபோது அவைகள் 10 கணக்குகளில் அடகு வைத்திருப்பது தெரியவந்தது. அதனால் நிதி நிறுவன மேலாளரிடம் ஆசிரியர் ஆல்வின் புகாரளித்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் காசிமேடு காவல் நிலையத்தில் ஆல்வின் புகாரளித்தார். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.