மேற்குவங்க வன்முறையில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆட்சியை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவுக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி நடத்திய இடதுசாரி கட்சிகளுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கும் ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் வெற்றி பெற்ற பிறகு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பாக் நகர பாஜக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு ஆளுநரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.