முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி ஓர் அணியாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும் செயல்பட்டனர். கடந்த 2017-ல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் என 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த 11 பேரையும் கட்டுத் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரும் 4 வாரங்களில் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.