செங்கல்பட்டு : சிறுமியைக் கொலை செய்த சிறுவன் – ஆபாச வீடியோக்களால் தடம் மாறிய வாழ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் இன்னொரு முகம் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிறுமியைக் கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்ட உறவினர்கள் போலீஸார் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருக்கும் ஒரு தம்பதியினரின் மகள், மின்கட்டணம் செலுத்த வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால், மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்தச் சூழலில் சிறுமி குடியிருக்கும் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அதைப் பார்த்து சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சிறுமி, கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனால் அவளைக் கொலை செய்தது யார் என போலீஸார் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது.

அதனால் சிறுவனைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் ஐடிஐ படிப்பது தெரியவந்தது. மேலும் அவனுக்கு பெற்றோர் இல்லாததால் உறவினர் வீட்டில் தங்கியிருந்தான்.

சிறுவன் ஆசையாக கேட்டதால் அவனுக்கு உறவினர்கள் செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அந்தச் செல்போனில் ஆபாச வீடியோக்களை சிறுவன் நீண்ட காலமாக பார்த்து வந்திருக்கிறான்.

அதனால் அவனின் வாழ்க்கை தடம் புரண்டிருக்கிறது. சம்பவத்தன்று தனியாக வந்த 11 வயது சிறுமியிடம் சிறுவன் பேச்சுக் கொடுத்திருக்கிறான். அப்போது அறிமுகமான அண்ணன் என்று சிறுமியும் பேசியிருக்கிறார்.

இருவரும் பேசிக் கொண்டே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமியைக் கட்டிப்பிடித்த சிறுவன் அவளிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறான்.

அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு சத்தம் போட்டிருக்கிறாள். அதனால் ஆத்திரமடைந்த சிறுவன், கல்லால் தாக்கி அவளைக் கொலை செய்திருக்கிறான்.

பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பிறகு இந்த வழக்கு அடுத்தக்கட்டத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *