நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் 21 கரோனா எதிர்ப்பு மருந்துகள்

கரோனா வைரஸுக்கு இப்போதைக்கு மருந்து இல்லை. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசிகளை கண்டுபிடித்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் புதிய கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளை ஆய்வு செய்து கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் மருந்துகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் சான்போர்டு பர்ன்ஹம் பிரேப்ஸ் மருத்துவ கண்டுபிடிப்பு மையத்தின் பேராசிரியர் சுமித் சண்டா தலைமையிலான இந்த குழுவினர், சுமார் 12,000-க்கும் மேற்பட்ட மருந்துகளை ஆய்வு செய்தனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்.


இதில் குறிப்பிட்ட 21 மருந்துகள் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பலன் அளிப்பதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் வரிசையில் இருப்பது எச்ஐவி வைரஸ் மருந்தான அடாஜன்விர். அதற்கு அடுத்து 2-வது இடத்தில் ரெமிடெசிவிர் மருந்தும் 3-வது இடத்தில் இபாவிர்ன்ஸ் மருந்தும் இடம் பெற்றுள்ளன.


ரிடோனவிர், டோலுட்டிகிராவிர், அசுனாபிரிவிர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குளோபாஜிமைன், ஹன்பாங்சின் ஏ, அபிலிமோட், ஒன்எ 5334, அஸ்டமிஜோல், சிமிபிரிவிர், தருணாவிர், லோபின்விர் உட்பட ஒட்டுமொத்தமாக 21 மருந்துகள் ஆய்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 13 மருந்துகள் ஏற்கெனவே கரோனா வைரஸ் ஆராய்ச்சிக்காக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


“ரெமிடெசிவிர் மருந்து நோயாளிகளை விரைவாக குணமாக்குகிறது. ஆனால் இந்த மருந்து அனைத்து நோயாளிகளுக்கும் நல்ல பலன் அளிக்கவில்லை. சிலர் வேகமாக குணமடைகின்றனர். வேறு சிலருக்கு பலன் அளிக்கவில்லை” என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் சுமித் சண்டா தெரிவித்துள்ளார்.


விஞ்ஞானிகள் குழு பட்டியலிட்டுள்ள 21 மருந்துகளும் ஓரளவுக்கு மட்டுமே பலன் அளிக்கும். கரோனா வைரஸுக்கு எதிராக வீரியமுள்ள புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அந்த வைரஸை ஒழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *