24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் அரசு, தனியார் மருத்துவமனைகள், மையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.