ஆந்திராவுக்கு 3 தலைநகர்கள்

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து கடந்த 2014 ஜூனில் தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது.


ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலையில் மாநிலத்தின் மையப் பகுதியான விஜயவாடா-குண்டூர் இடையே அமராவதி நகரம் புதிதாக உருவாக்கப்பட்டது. அங்கு தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு அமராவதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது.


கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்றவுடன் அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் என 3 தலைநகர்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இதுதொடர்பான சட்ட மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஆந்திராவில் 3 தலைநகர்கள் உதயமாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *