அடிமைகளாக வாழும் 3 கோடி பெண்கள்

அடிமைகளாக வாழும் 3 கோடி பெண்கள் குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வாக் பிரீ என்ற அமைப்பு அடிமைத் தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 

அந்த அமைப்பு உலகம் முழுவதும் வாழும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி ஐ.நா. சபையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

“உலகின் பல்வேறு நாடுகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர். சில நாடுகளில் சட்டங்கள்கூட பெண்களுக்கு எதிராக உள்ளன. 

அவர்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படுகிறது. சில நாடுகளில் கணவரின் துணையின்றி வெளியே செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்கள், அதே பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க சில நாடுகளின் சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. சில நாடுகளில் மதங்களின் பெயரில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 

பாலியல் துன்புறுத்தல், பால்ய திருமணம், கட்டாய திருமணம், கட்டாய பணி என பல்வேறு வகைகளில் நவீன கால அடிமைகளாக பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். 

அதாவது 130 பெண்களில் ஒருவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகிறார். ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பெண்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். 

ஆசியா, பசிபிக், ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பா, அமெரிக்க கண்ட நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. 

அரபு நாடுகளை சேர்ந்த பெண்கள் கட்டாய திருமணத்தில் சிக்கி அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

இந்தியா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்கள். அவர்களின் சுதந்திரம், உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்தந்த நாடுகளின் அரசுகள் பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *