ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்த பிளம்பர் பழனி (வயது 46). இவருக்கு பவானி (வயது 40) என்ற மனைவியும், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் தேவதர்ஷினி (வயது 17) என்ற மகள் ஆறாம் வகுப்பு படிக்கும் பிரகதீஷ் (வயது 11) என்ற மகன் உள்ளனர்.

சொந்த வீட்டில் முதல் மாடியில் தங்கியிருந்த இவருடன் அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் இவரது தந்தை சண்முகம் (வயது 75) வசித்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் சண்முகம் முதல் மாடியில் உள்ள பழனி வீட்டிற்கு காபி சாப்பிட சென்றுள்ளார். அப்போது வாசலில் வளர்ப்பு நாய்  இறந்து கிடப்பது கண்டு சண்முகம் பழனி வீட்டின் கதவைத் தட்டி அழைத்து பழனியிடம்  இதுகுறித்து கேட்டுள்ளார்.

மழுப்பலாக பேசிய பழனி சண்முகத்தை கீழே அழைத்து வந்துள்ளார். நாயை அகற்ற  தேவையான பொருட்களை கொண்டு வருவதாக கூறி பழனி அங்கிருந்து  வெளியே சென்றுள்ளார்.

 மதியம் ஒரு மணி வரையில் பழனி வராதது கண்டு சண்முகம் சந்தேகம் அடைந்தார்.  வீட்டிற்கு வந்த நண்பர் உதவியுடன் முதல் மாடியில் சென்று பார்த்ததில் வீட்டில் படுக்கையில் பவானி மற்றும் இரண்டு பிள்ளைகளும் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் சந்தேகத்தின் பெயரில் இரண்டாவது மாடியிலிருந்த பழனி அலுவலகத்திற்கு சென்று பார்த்ததில் அங்கு பழனி கையை அறுத்துக்கொண்டு ரத்தம் வடிந்த நிலையில் கவலைக்கிடமாக இருந்துள்ளார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து திருவிக நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தகவலின்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவகர், உதவி கமிஷனர் சுரேந்தர்,  இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இறந்த 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினர் இறந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பழனியிடம் விசாரித்தால் மட்டுமே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *