பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தீவிர முயற்சி கொண்டு வருகிறது. இதற்காக எல்லையில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கவனம் சிதறும்போது தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வது பாகிஸ்தான் ராணுவத்தின் வியூகம்.
அதன்படி காஷ்மீரின் நவுகாம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த ராணுவ வீரர்கள், எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான இந்திய, பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராணுவ மேஜர் ஜெனரல் விரேந்திர வாட்ஸ் கூறுகையில், “2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளோம். அதே பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து சல்லடை போட்டு தேடி வருகிறோம். சுமார் 300 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊருடுவ எல்லையில் காத்திருக்கின்றனர். இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.