3000 ஆண்டு பழமையான மனித எலும்புக்கூடுகள்! ஆதிச்சநல்லூர், கொந்தகையில் கிடைத்த பொருள்கள்

ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகளும், கொந்தகை அகழாய்வில் மனித எலும்புகளும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. நான்கு இடங்களில் நடைபெறும் இந்த அகழாய்வில் கொந்தகையில் நேற்று மாலை முழு மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று ஐந்தரை அடி அளவில் உள்ளது.

இதனை மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் இந்த முழு எலும்பு கூடுகளை ஆய்வு செய்து எடுத்தனர். ஏற்கெனவே போன மாதம் 13ஆம் தேதி ஒரு எலும்பு கூடும்,7-ஆம் தேதி குழந்தையின் முழு எலும்புகூடும், ஜூன் 19-ஆம் தேதி ஒரு எழும்பு கூடும் கிடைக்கபெற்றன.

இதுவரை 5 முழு உருவ குழந்தை எலும்பு கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது. மேலும் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்கள் கிடைக்க பெற்றன. அதில் இருந்து மனித எலும்புகள் கிடைக்கபெற்று ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் மற்றொரு குழியில் தொடர்ச்சியாக குழந்தைகளின் எலும்புகள் கிடைக்கப்பெற்று வருவது.

இந்த எலும்புகளை ஆய்வு செய்த பின்னர் எந்த ஆண்டில் வாழ்ந்தவை ,எலும்புகளின் பாலினம், வாழ்க்கை முறைகள் ஆகியவை தெரியவரும் என தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.இதனிடையே, உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தற்போது 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளது. அந்த குறியீடுகளில் ஏணி, இலை போன்று வரையப்பட்டுள்ளது. கீறல்கள் மற்றும் குறியீடுகளை ஆய்வு செய்யும்போது பழங்கால மனிதர்களின் வாழ்வியல் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியில் கரும்பு, மான், முதலை, பெண் உருவங்கள் இருந்த பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *