தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக அதிகபட்சமாக புளியந்தோப்பில் 96 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பட்டாசு விபத்தால் 15 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 10 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 8 பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அரசு மருத்துவமனைகளில் 38 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் பட்டாசினால் 106 விபத்துகள் நேரிட்டன.
தீபாவளியை ஒட்டி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் குவிந்தன. மாநகராட்சி முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 18 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.