மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை

மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  தடை விதித்துள்ளது. 

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 7 மாதங்களாக பதற்றம் நீடிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. 

இதில் சில செயலிகள் வேறு பெயர்களில் புதிதாக முளைத்தன.

இதைத் தொடர்ந்து டிக் டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு கடந்த ஜூலை இறுதியில் மத்திய அரசு தடை விதித்தது.    

இதன்பின் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதில் பப்ஜி தென்கொரிய  நிறுவனத்தை சேர்ந்தது. எனினும் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் வைத்திருப்பதால் பப்ஜிக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தடை விதித்தது. 

சீனாவின் பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் ‘அலிஎக்ஸ்பிரஸ்’ உட்பட 4 செயலிகளும் தடை பட்டியலில் உள்ளன.

இதன்மூலம் இந்திய சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்திய சைபர் குற்ற தடுப்பு ஒருங்கிணைப்பு மையம்,

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரைகளின்பேரில் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக தடை விதிக்கப்பட்ட 43 சீன செயலிகளில் மூன்றில் ஒரு பங்கு செயலிகள், ‘டேட்டிங்’ செயலிகளாகும். இத்தகைய செயலிகள் மூலம் இந்திய ராணுவ வீரர்களை, எதிரி நாடுகளின் பெண் உளவாளிகள் தங்கள் வலையில் சிக்கச் செய்கின்றனர்.

இதை தடுக்க டேட்டிங் செயலிகள் மற்றும் குறிப்பிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவை போன்று அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ள புதிய அதிபர் ஜோ பைடன் என்ன முடிவு எடுப்பார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *