மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 47,703 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக 50 ஆயிரத்தை நெருங்கி சென்ற வைரஸ் தொற்று இன்று சற்று குறைந்திருக்கிறது. இதற்கு காரணம் மகாராஷ்டிரா.
வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் நாள்தோறும் 10 ஆயிரத்தை தொடும் வகையில் வைரஸ் தொற்று உயர்ந்து வந்தது. அந்த மாநில அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் புதிய வைரஸ் தொற்று 8 ஆயிரமாக குறைந்திருக்கிறது. இதன்காரணமாக தேசிய வைரஸ் பாதிப்பும் சற்று குறைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 14 லட்சத்து 83 ஆயிரத்து 157 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 744 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 33 ஆயிரத்து 425 ஆக உயர்ந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 944 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரம் 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக தமிழகம் 2-வது இடத்தில் நீடிக்கிறது. மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் டெல்லியில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 853 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் வரை மத்திய சுகாதாரத் துறை காலை, மாலை என இரண்டு முறை கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டது. கடந்த மே 6-ம் தேதி முதல் காலையில் மட்டுமே புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
தற்போது புள்ளிவிவர நடைமுறையில் மேலும் ஒரு புதிய மாற்றத்தை மத்திய சுகாதாரத் துறை இன்று அமல்படுத்தியுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு புள்ளிவிவரத்தை வெளியிடாமல், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர், உயிரிழந்தோர் விவரங்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.
வைரஸ் பாதிப்பு பல லட்சங்களை தாண்டியிருப்பதாக மக்களிடையே ஏற்படும் பீதியை குறைக்க புதிய நடைமுறை அமல் செய்யப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.