உலகளாவிய அளவில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில்இருந்து வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 46 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்கத்தால் அமெரிக்கா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் பசி, பட்டினி இருக்கக்கூடாது என்பதற்காக அரசு தரப்பில் முக்கிய பகுதிகளில் உணவு வங்கிகள் செயல்படுகின்றன. ஏழை, எளிய மக்கள் இந்த உணவு வங்கிக்கு சென்று இலவசமாக உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதேபோல வேலையின்றி தவிப்பவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு தோராயமாக ரூ.28 ஆயிரம் வழங்கப்படுகிறது. சில மாகாண அரசுகள் கூடுதலாக நிதி வழங்குகின்றன. கலிபோர்னியா உள்ளிட்ட மாகாண அரசுகள் தோராயமாக வாரத்துக்கு ரூ.44 ஆயிரத்தை வழங்கி வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த நிதியுதவி கோரி விண்ணப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி அமெரிக்கா முழுவதும் சுமார் 5 கோடி பேர் வேலையிழந்து பரிதவிக்கின்றனர். அவர்கள் நிவாரண உதவி கோரி அரசிடம் கையேந்தி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 13 லட்சம் பேர் வேலையிழந்து அரசு நிதியுதவியை கோரியுள்ளனர்.
அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். இதில் 5 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால் வளரும் நாடுகள், ஏழை நாடுகளின் நிலை என்ன?