சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 போலீஸார் கைது

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.


இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா ஆகிய 5 பேர் மீதும் கொலை வழக்கு, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைதான 5 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி, மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.


இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தபோது வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது.


தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
வழக்கு முழுமையாக சிபிஐ-க்கு மாற்றப்படாத நிலையில் எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *