சாத்தான்குளம் வியாபாரிகளும் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருவரும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்த இவ்வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஏற்கெனவே 11 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்ஸ் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபையே கருத்து தெரிவித்துள்ளது.
சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸாரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.