இந்தியாவில் கர்ஜனையுடன் தரையிறங்கின ரபேல் போர் விமானங்கள் – தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 5 போர் விமானங்களை கடந்த 27-ம் தேதி இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது.
பிரான்ஸின் மேரிங்நாக் விமானப்படைத் தளத்தில் இருந்து அந்த போர் விமானங்களை இந்திய விமானிகள் ஓட்டி வந்தனர்.

ரபேல் போர் விமானம்
ரபேல் போர் விமானம்

பிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொலைவு 7,000 கி.மீ. ஆகும்.
எனவே மேரிங்நாக்கில் இருந்து 6,600 கி.மீ. தொலைவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்களும் நேற்று தரையிறங்கின. நடுவானில் பிரான்ஸின் ஏர் பஸ் 330 விமானம், போர் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பியது.

ரபேல் போர் விமானம்
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரபேல் போர் விமானங்கள். இந்த விமானங்களுக்கு 2 சுகோய் ரக விமானங்கள் இருபுறமும் பாதுகாப்பு அளித்தன. வெண் மேக பரப்பில் 7 விமானங்களும் கம்பீரமாக பறந்தன.


சுமார் 7 மணி நேர பயணத்துக்குப் பிறகு அல் தாப்ராவில் இந்திய விமானிகள் சிறிது ஓய்வெடுத்தனர். அங்கேயே ரபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.
அல் தாப்ராவில் இருந்து ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு இன்று காலை 5 ரபேல் போர் விமானங்களும் சீறிப் பாய்ந்து புறப்பட்டன.

ரபேல் போர் விமானம்
ரபேல் போர் விமானம்

இரு நகரங்களுக்கான தொலைவு 2,300 கி.மீ. ஆகும். வரும் வழியில் இந்திய விமானப் படையின் ஐ.எல். 78 ரக விமானம், ரபேல் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் நிரப்பியது.
இந்திய வான் எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நுழைந்தன.

ரபேல் போர் விமானம்
ரபேல் போர் விமானம்

அப்போது மேற்கு அரபிக் கடலில் ரோந்து சுற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், ரபேல் போர் விமானங்களை ரேடியோ அலைகள் மூலம் வரவேற்றது.
நாட்டின் வான் எல்லைக்குள் ரபேல் நுழைந்ததும் இந்திய விமானப்படையின் இரண்டு சுகோய் ரக விமானங்கள் இருபுறமும் பாதுகாப்பு அளித்தன.

இந்திய வான் எல்லையில் கம்பீரமாக அணிவகுத்து பறந்த ரபேல் போர் விமானங்கள்.

வெண்மேகம் சூழ்ந்த வான்பரப்பில் 7 விமானங்களும் வானில் கம்பீரமாக அணிவகுத்து பறந்தன. அந்த வீடியோவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் 5 ரபேல் போர் விமானங்களும் பிற்பகல் 2.45 மணிக்கு அடுத்தடுத்து கம்பீரமாக தரையிறங்கின.

ஹரியாணாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கிய ரபேல் போர் விமானம்.

அந்த போர் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் மத்தியில் ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட உள்ளன.
சீனாவுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் லடாக் எல்லைக்கு ரபேல் விமானங்கள் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *