சென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவு – முதல்வர் முதல் மக்கள் வரை இரங்கல்

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 70 வயதானாலும் சுறுசுறுப்புடன் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார் டாக்டர் திருவேங்கடம்.

இன்றைய உலகில் மருத்துவம் பிசினஸாகிவிட்டது. ஆனால், அதை சேவையாக செய்துவந்தார் டாக்டர் திருஙவேங்கடம்.

தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் பீஸாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார்.

அதனால் அவரின் பெயரை விட 5 ரூபாய் டாக்டர் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். வடசென்னை மக்களால் 5 ரூபாய் டாக்டர் என திருவேங்கடம் செல்லமாக அழைக்கப்பட்டார்.

யார் இந்த 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்?

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார் டாக்டர் திரு வேங்கடம் வீரராகவன். பின்னர் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.

சென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்
சென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்

பணி நேரத்தை தவிர்த்து மீதமுள்ள நேரங்களில் வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்தில் டாக்டர் திருவேங்கடம் மருத்துவம் பார்த்தார்.

கிளினிக்கிற்கு வருபவர்களிடம் அன்பாக பேசும் திருவேங்கடம், 2 தடவை சந்திப்பிலேயே குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார்.

அன்பாகவும் நோய்க்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை டாக்டர் திருவேங்கடம், கொடுப்பதால் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஏழைகளின் டாக்டர், கைராசி டாக்டர் என ஏழை, ஏளிய மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

முதல்தடவை டாக்டர் திருவேங்கடத்தை சந்திப்பவர்களுக்கு அவரின் சிரிப்பை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மக்கள் மனதில் இடம்பிடித்த திருவேங்கடத்துக்கு சிறந்த மனிதர் என்ற விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை விட மக்கள் தினமும் முழுமனதோடு அய்யா நீங்கள் நீண்ட காலம் வாழணும் என்ற வாழ்த்துக்கள்தான் திருவேங்கடத்தின் எனர்ஜி பிளஸாக இருந்தது. எவ்வளவு புகழ், பெயர் கிடைத்தப்பிறகும் தன்னுடைய சிம்பிள்சிட்டியை அவர் இறுதிவரை கடைபிடித்தார்.

பைக்கில்தான் அவர் பல இடங்களுக்குச் சென்று மருத்துவம் பார்ப்பார். வியாசர்பாடியில் ஏழைகளுக்காக மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே டாக்டர் திருவேங்கடத்தின் நீண்ட நாள் கனவு, இல்லை அது அவரின் ஆசை என்றே சொல்ல வேண்டும்.

வடசென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்
டாக்டர் திருவேங்கடம்

டாக்டர் திருவேங்கடத்தின் மனைவி சரஸ்வதி. இவர் ரயில்வே அதிகாரியாக வேலைப்பார்த்தவர். மகன் தீபக், மகள் ப்ரித்தி ஆகியோர் டாக்டர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்புதான் டாக்டர் திருவேங்கடத்தின் இன்னொரு ப்ளஸ்.

கொரோனா ஊரடங்கில் மக்களை நேரில் சந்திக்க முடியாத சூழலிலும் போன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவந்தார். கடந்த 13-ம் தேதி டாக்டர் திருவேங்கடத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர்.

நேற்று நள்ளிரவில் டாக்டர் திருவேங்கடத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி கேட்டு வடசென்னை மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

மெர்சல் படத்தில் நடிகர் விஜய், 5 ரூபாய் டாக்டராக நடித்ததற்கு டாக்டர் திருவேங்கடம்தான் ரோல்மாடல்.

டாக்டர் திருவேங்கடத்தின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருப்பார் 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *