சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க நள்ளிரவில் 9 சேர்கள், 2 கம்ப்யூட்டர்களைத் திருடிய எதிர்வீட்டுக்காரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 35-வது வார்டு அலுவலகத்தில் கடந்த 3.11.2020-ல் 2 கம்ப்யூட்டர்கள், 9 பிளாஸ்டிக் சேர்கள் திருட்டுப் போனது. இதுகுறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், வழக்குபதிந்து விசாரித்தார்.
அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தின் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஆறுமுகம் என்பவர், லுங்கி, பணியன் அணிந்தப்படி மாநகராட்சி அலுவலகத்துக்குள் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
அடுத்து அவர் ஒரு சேரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்கிறார். அதன்பிறகு மீண்டும் அலுவலகத்துக்குள் சென்று இன்னொரு சேரை எடுத்து தலையில் வைத்தப்படி வீட்டுக்குள் செல்கிறார். அப்போது சிசிடிவியை பார்த்து அவர் ஏதோ சொல்கிறார். இவ்வாறு 9 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வைக்கிறார்.
அடுத்து 2 கம்ப்யூட்டர்களையும் திருடிக் கொண்டு செல்கிறார். பொறுமையாக திருடிய ஆறுமுகம், பின்னர் வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். இந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போலீஸார் ஆறுமுகத்திடம் விசாரித்தனர். அப்போது அவர், இந்த ஆபீஸை யாரும் பூட்டுவதில்லை. இரவு நேரங்களில் கதவுகள் திறந்தே கிடைக்கின்றன. நானும் பல தடவைச் சொல்லிப்பார்த்தேன். ஆனால் யாரும் கேட்கவில்லை.
அதனால்தான் திருடினேன். திருட்டு நடந்தப்பிறாகாவது அலுவலகத்தை மூடுவார்களா என்று பார்ப்போம் என்று கூலாக பதிலளித்தார். அதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் போலீஸார் கேட்டதற்கு, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து ஒரு அவசர வேலையைக் கொடுத்திருந்தார்கள். அதனால் தற்காலிக ஊழியர்கள் மூலம் அந்த வேலையை இரவில் செய்தோம். அவர்கள் கதவைப் பூட்டாமல் சென்றுள்ளனர். மேலும் அலுவலகத்தில் உள்ள காவலாளியும் வயதானவர். அவர், இரவு 7 மணி வரைதான் பணியில் இருப்பார் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளை அலர்ட் செய்ய அரசு அலுவலகத்தில் சேர்களையும் கம்ப்யூட்டர்களையும் திருடிய ஆறுமுகம், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.