தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி இன்றும் 5 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
3.61 லட்சம் பேர்
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து ஆயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர்.
53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 239 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,175 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 462 பேரும், கோவையில் 397 பேரும், திருவள்ளூரில் 293 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
தென்மாநிலங்களில் கவலை
சென்னையை தவிர இதர 36 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 811 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. தென்மாநிலங்களில் வைரஸ் தொற்று கணிசமாக உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது.
சென்னையைவிட பிற மாவட்டங்களில், 4 மடங்கு அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 63 அரசு ஆய்வகங்கள், 76 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 139 ஆய்வகங்களில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுவரை 39 லட்சத்து 88 ஆயிரத்து 599 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 75 ஆயிரத்து 76 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக எம்எல்ஏவுக்கு தொற்று
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுமுகத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவரது மூத்த மகனுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எம்எல்ஏ ஆறுமுகத்தின் இளைய மகனுக்கு அண்மையில் தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை சித்த மருத்துவப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
தற்போது எம்எல்ஏவுக்கும் அவரது மூத்த மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவரது குடும்பத்தினர் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.