தமிழகத்தில் 5995 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 101 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் 5995 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 677 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் ஒரே நாளில் 101 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் இன்று 1,282 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 430 பேர், கோவையில் 395 பேர், திருவள்ளூரில் 369 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 32 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 62 ஆயிரத்து 943 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 74 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5995 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 101 பேர் பலியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
தேசிய அளவில் 4-வது இடம்
மத்திய சுகாதாரத் துறை தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 6 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இதில் 4,59,124 பேர் குணமடைந்துள்ளனர். 1,62,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.ஒரே நாளில் 326 பேர் உயிரிழந்தனர். இதுவரை 21,359 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடமாக கருதப்பட்டாலும் மத்திய சுகாதாரத் துறை பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் மகாராஷ்டிரா- 1,62,806 பேர், ஆந்திராவில் 87,177 பேர், கர்நாடகாவில் 82,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 53, 413 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதன்படி தமிழகம் தேசிய கொரோனா பாதிப்பு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
உத்தர பிரதேசம் 48,511 பேர், மேற்குவங்கத்தில் 27,696 பேர், பீகாரில் 26,789 பேர், அசாமில் 22,711 பேர், தெலங்கானாவில் 21,687 பேர், ஒடிசாவில் 21,063 பேர், கேரளாவில் 18,184 பேர் என அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.