ஒரே நாளில் 61,537 பேருக்கு கொரோனா..933 பேர் பரிதாப பலி…

கடந்த ஒரு வாரமாக புதிய வைரஸ் தொற்று அரை லட்சமாக இருந்தது. முதல்முறையாக நேற்று புதிய தொற்று 62 ஆயிரத்தை தாண்டியது. இரண்டாவது நாளாக இன்றும் புதிய தொற்று 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 61 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மருத்துவமனை வளாகத்தில் ஓய்வெடுக்கும் சுகாதார ஊழியர்கள்.
மும்பை மருத்துவமனை வளாகத்தில் ஓய்வெடுக்கும் சுகாதார ஊழியர்கள்.


இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 லட்சத்து 27 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 19 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இன்று ஒரே நாளில் 933 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 42 ஆயிரத்து 518 ஆக உயர்ந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் புதிதாக 10 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 3 ஆயிரத்து 901 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை தாராவியில் உள்ள அரசு அலுவலகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மும்பை தாராவியில் உள்ள அரசு அலுவலகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.


அண்டை மாநிலமான ஆந்திராவில் நேற்று 10 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 960 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 6 ஆயிரத்து 670 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 924 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மத்திய சுகாதாரத் துறை புதிய நடைமுறையை அமல் செய்துள்ளது. இதற்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டு வந்தது.

பஞ்சாபின் சண்டிகரில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்.
பஞ்சாபின் சண்டிகரில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்.


தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு மத்திய சுகாதாரத் துறை பட்டியல் தயாரிக்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.


தமிழகத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் 4-வது இடத்துக்கு வந்துள்ளது. புதிய வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தினால் தமிழகம் சாதனை படைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *