சென்னை கீழ்ப்பாக்கத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் வேலைப்பார்க்கும் தங்க பட்டறை ஒன்று உள்ளது. இங்கு தங்க நகை கட்டிங், டிசைனிங் , பட்டை தீட்டும் வேலைகள் நடந்து வருகின்றன.
ஆர்டரின் பெயரில் சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளுக்கு தங்க நகைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப்பட்டறையில் வேலைப்பார்க்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த அருள் என்கிற அருண், ரமேஷ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தப்பான் ரூபீதாஸ் ஆகியோர் வேலைக்கு வரவில்லை.

மேலும் அருள் என்பவர் திடீரென முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதனால் சந்தேகமடைந்த தங்கப்பட்டறையில் உரிமையாளர் அருண்குமார், விசாரணை நடத்தினார்.
அப்போது அருள், ரமேஷ், தப்பான் ரூபீதாஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தங்கப்பட்டறையிலிருந்து தங்கக்கட்டிகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடியது தெரியவந்தது.
இவர்களிடம் கொடுத்த 989 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் மாயமானதையும் உரிமையாளர் அருண்குமார் கண்டறிந்தார். பின்னர் அவர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் புகாரளித்தார்.
அதன்பேரில் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரின் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கார்த்திக்கேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

புகாரளித்த 3 மணி நேரத்தில் அருள், ரமேஷை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் தப்பான் ரூபீதாஸை போலீஸார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட அருள் என்கிற அருண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, என் பெயர் அருள். என்னை எல்லோரும் அருண் என்று கூறுவார்கள். நான் திருவொற்றியூரில்தான் பிறந்து வளர்ந்தேன்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். நான் கடந்த 17 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கத்தில் தங்க தொழில் பட்டறையில் கட்டிங் வேலை செய்து வருகிறேன்.
நானும் அதே பட்டறையில் வேலை செய்யும் திருவொற்றியூரைச் சேர்ந்த ரமேஷ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தப்பான் ரூபீதாஸ் ஆகியே மூவரும் நண்பர்கள்.
நாங்கள் மூன்று பேரும் வேலை செய்த இடத்திலிருந்து சிறிது சிறுதாக நகைகளை திருடி எங்களுக்குள் பரிமாற்றம் செய்வோம்.
எங்களின் உரிமையாளர் தங்க கட்டிகள் கணக்கு கேட்கும் போது நாங்கள் எங்களுக்குள் ஒருவொருக்கொருவர் தங்கத்தை கொடுத்து உதவி செய்வோம்.
திருடிய தங்கத்தை சௌகார்பேட்டையில் விற்று செலவு செய்து வந்தேன். தப்பான் ரூபீதாஸ் என்னிடம் 100 கிராம் எடையுள்ள தங்கத்தை கேட்டான்.
நான் அவனுக்கு 100 கிராம் தங்கத்தைக் கொடுத்து உதவி செய்தேன். என்னிடம் 100 கிராம் தங்கத்தை தருவதாகக் கூறிய தப்பான் ரூபீதாஸ் செப்டம்பர் 16ம் தேதி தலைமறைவாகிவிட்டார்.
அனால் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தேன். நானும் ரமேசும் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் நின்றுக் கொண்டிருந்தபோது எங்களை போலீஸார் பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.