கூடுதல் கட்டணம்.. 9 பள்ளிகள் மீது நடவடிக்கை…

கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இதனை விசாரித்த ஐகோர்ட், இந்த ஆண்டு பள்ளி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கலாம். அதில் முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் இறுதிக்குள் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது.

ஆனால் பெரும்பாலான பள்ளிகள் ஐகோர்ட் உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை வசூலித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

“கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 14 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்தன. இதில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *