`ஹலோ… நான் சரத் பேசுறேன்’ – நடிகர் சரத்குமாரின் செல்போனிலிருந்து சென்ற போலி கால்ஸ்

இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடக்கும் சீட்டிங் ஒவ்வொருவருக்கும் புதுபுது அனுபவங்களை கற்றுக் கொடுத்துவருகின்றன. செல்போனில் நடக்கும் ஹைடெக் சீட்டிங் அதிர்ச்சி ரகமாகவே இருக்கின்றன. நடிகர் சரத்குமாருக்கு அப்படியொரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதுகுறித்து செய்தி தொகுப்புதான் இது. வாங்க விரிவாக பார்க்கலாம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைனில் ஒரு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் `என்னுடைய செல்போன் நம்பரிலிருந்தும் என்னுடைய குரல் போல யாரோ ஒருவர் போனில் பேசி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் உத்தரவின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் அந்த மர்ம நபரை தேடிவருகின்றனர். நடிகர் சரத்குமாரும் அவரின் செல்போன் நம்பரை டூப்ளிக்கேட்டாக பயன்படுத்தி வரும் மர்ம நபரும் பேசிய செல்போன் உரையாடலில்

சரத்குமார் :உங்கள் பெயர் என்ன?

போலி நபர்: அசோக்

சரத்குமார் :எங்கு இருந்து பேசுகிறீர்கள்?

போலி நபர்: கோவை

சரத்குமார்: என்ன வேலைப்பார்க்கிறீர்கள்?

போலி நபர்: இன்ஜினீயர்

சரத்குமார்: என்னுடைய செல்போன் நம்பரை பயன்படுத்தி ஏன் பேசுகிறீர்கள்?

போலி நபர்: அப்படியெல்லாம் இல்லை சார். நான் உங்களுக்கு போன் செய்தேன். நீங்கள் போனை எடுக்கவில்லை. அதனால்தான் மறுபடியும் உங்கள் நம்பருக்கு போன் செய்தேன். நான் ஒரு சாதாரண நபர் சார்

சரத்குமார்: ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்?

போலி நபர்: நான் தப்பா எதுவும் செய்யல, யாருடைய செல்போன் நம்பரையும் இப்படி பயன்படுத்த ஒரு ஆப்ஸ் இருக்கிறது.

இந்த ஆடியோ உரையாடலையும் ஆதாரமாக போலீஸாரிடம் கொடுத்துள்ளார் சரத்குமார்.

சரத்குமார்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, “ஆண்கள், பெண்கள் குரலில் பேசுவதற்கான ஆப்ஸ்கள் உள்ளன. அதைப்போலதான் ஒருவருடைய செல்போன் நம்பரை அவருக்கே தெரியாமல் அவர் பேசுவதைப் போல பேசவும் ஆப்ஸ் உள்ளது. சரத்குமாரின் செல்போன் நம்பரை பயன்படுத்தி வரும் நபர் கோவையைச் சேர்ந்த இன்ஜினீயர் அசோக் என்று கூறியுள்ளார். அவரின் குரலைக் கேட்கும்போது வடமாநிலத்தவர்கள் தமிழ் பேசுவதுபோல தெரிகிறது. எனவே அந்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இந்தச் சம்பவத்துக்குப்பிறகு சரத்குமார், அந்தச் செல்போன் நம்பரை பயன்படுத்தாமல் புதிய செல்போன் நம்பரை பயன்படுத்தி வருகிறார் என்கின்றனர் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்..

குழப்பமடைந்த சரத்குமார்

சரத்குமாருக்கு தெரியாமல் அவரின் செல்போன் நம்பரை பயன்படுத்திய மர்ம ஆசாமி சிக்கியது எப்படி என்று சமத்துவ மக்கள் கட்சி மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் விளக்கமாக நடந்த சம்பவத்தை விவரித்தார். “கடந்த சில தினங்களாக சரத்குமாரின் செல்போன் நம்பரிலிருந்து சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் விவிஐபி-க்கள், சினிமா பிரபலங்கள் என குறிப்பிட்டவர்களுக்கு போன் கால்கள் சென்றுள்ளன.

அவர்கள் எல்லோரும் சரத்குமாரிடம் அதுதொடர்பாக கேட்டபோது நான் உங்களிடம் பேசவே இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு உங்கள் செல்போன் நம்பரிலிருந்துதான் கால் வந்தது என்று செல்போனில் உள்ள கால் ஹிஸ்ட்ரிகளை ஆதாரமாக எடுத்துக் காட்டினர். சரத்குமாரும் தன்னுடைய செல்போனில் உள்ள கால் ஹிஸ்ட்ரியைக் காட்டி நான் உங்களுக்கு போன் செய்யவே இல்லை என்று கூறினார்.

இந்தச் சமயத்தில்தான் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் அண்ணே உங்கள் மிஸ்டு கால் பார்த்தேன் என்று சரத்குமாரிடம் போனில் பேசினார். அதுவும் சரத்குமாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சரத்குமார் விசாரித்தபோதுதான் அவரின் செல்போன் நம்பரை வேறு யாரோ ஒருவர் தவறாக பயன்படுத்துவது தெரியவந்தது.

உடனே அந்தச் செல்போன் நம்பரை சரத்குமார் பயன்படுத்துவது நிறுத்திவிட்டு தன்னுடைய நெருங்கிய சர்க்கிளில் உள்ளவர்களுக்கு புதிய செல்போன் நம்பரை கொடுத்தார். தன்னுடைய பழைய செல்போன் நம்பரை எப்படி மர்ம நபர் பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறியதான் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

சரத்குமார்

கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் சென்னையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சரத்குமாரின் செல்போன் நம்பரிலிருந்து போன் அழைப்பு சென்றுள்ளது. அப்போது ஐபிஎஸ் அதிகாரி போனை எடுக்கவில்லை. பிறகு மிஸ்டு காலில் சரத்குமாரின் செல்போன் நம்பரைப் பார்த்த அந்த ஐபிஎஸ் அதிகாரி, சரத்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியிடம் சார் சொல்லுங்க என்று சரத்குமார் கூற, உங்கள் போனிலிருந்து எனக்கு மிஸ்டு கால் வந்திருக்கிறது. என்ன விஷயம் என்று ஐபிஎஸ் அதிகாரி கேட்டார். அதற்கு சரத்குமார், நான் உங்களுக்கு போன் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த ஐபிஎஸ் அதிகாரி, செல்போனில் தெரியாமல் கைப்பட்டு கால் வந்திருக்கும் என்று கூறினார். அப்போதுதான் சரத்குமாருக்கு தன்னுடைய செல்போன் நம்பரை வேறுயாரோ ஒருவர் பயன்படுத்தி பேசி வருவது ஊர்ஜிதமானது. உடனே அந்தத் தகவலை ஐபிஎஸ் அதிகாரியிடம் சரத்குமார் கூறினார். அதன்பிறகுதான் மர்மநபர் குறித்து போலீஸில் புகாரளித்துள்ளோம்” என்றார்.

சென்னை சைபர் க்ரைம் போலீஸார் சரத்குமாரின் செல்போன்நம்பரை தவறாக பயன்படுத்தி அவருக்கு தெரிந்தவர்களிடம் சரத்குமார் போலவே பேசிவரும் மர்மஆசாமியைப் பிடிக்க வியூகம் அமைத்துள்ளனர். விரைவில் சரத்குமாரின் செல்போன் நம்பரை பயன்படுத்தி சரத்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்தவர் சிக்குவார் என்று போலீஸார் தெரிவித்தனர். அப்போதுதான் சரத்குமாரின் செல்போன் நம்பரிலிருந்து அவர் யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற தகவல் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *