நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக் கிடங்கில் ஒப்பந்த ஊழியராக பாலாஜி (வயது 43) பணியாற்றினார்.
நடிப்பு மீது தீராத தாகம் கொண்ட அவரது தீவிர முயற்சிகளால் சின்னத் திரையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியின், “அது இது எது”, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
வடிவேலுவை போன்று மிமிக்ரி செய்ததால் வடிவேலு பாலாஜி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். சின்னத் திரையைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அதிக செலவானதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் வடிவேல் பாலாஜி இன்று காலமானார்.
அவரது உடல் சேத்துப்பட்டு எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சேத்துப்பட்டு டோபி கானா பகுதியில் வீடு அமைந்துள்ளது. நாளை மதியம் 2 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.