பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போதிய படவாய்ப்பு இல்லாமல், நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தனது சொந்த ஊரான பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புதிதாக ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “தனது மகன் சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடி பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு, அவனை மனநோயாளி என்று கூறி நடிகை ரியா துன்புறுத்தி உள்ளார். சுஷாந்தின் தற்கொலைக்கு அவரே காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் முதலில் நடிகை அங்கிதா லோகண்டேவை காதலித்தார். அதன்பிறகு அங்கிதாவிடம் இருந்து விலகி ரியா சக்கரவர்த்தியிடம் காதலில் விழுந்தார். சுஷாந்த் தற்கொலை வழக்கு விசாரணை தற்போது ரியாவை நோக்கி திரும்பியுள்ளது.
இந்த பின்னணியில் நடிகை அங்கிதா லோகண்டே இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உண்மை வெற்றி பெற்றிருக்கிறது” என்ற பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இளம் நடிகரின் தற்கொலை வழக்கில் இவ்வளவு நாள் பூனைக் குட்டி ஒளிந்து கொண்டிருந்தது. இப்போது அந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று அங்கிதாவுடன் சேர்ந்து பாலிவுட் வட்டாரங்களும் முணுமுணுக்கின்றன.