நிருபர் என்ற பெயரில் பேஸ்புக்கில் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவர் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரபல நடிகை மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வடமாநிலங்களில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக போஜ்புரி மொழி திரைப்படங்களும் மிகவும் பிரபலமானவை. போஜ்புரி திரையுலகின் முன்னணி நடிகை ராணி சட்டர்ஜி. இவர் நடிப்பில் வெளியான போஜ்பூரி திரைப்படங்களின் பாடல்கள் ‘யூ டியூபில்’ அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படுகிறது. இவர் மும்பை போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “பிரபல இதழின் நிருபர் என்ற பெயரில் ஒரு நபர், பேஸ்புக்கில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொல்லை கொடுக்கும் நபர் யார் என்பது குறித்து நடிகை ராணி சட்டர்ஜி, தனது புகாரில் குறிப்பிடவில்லை. மேலும் அந்த நபர் பேஸ்புக்கில் தன்னை விமர்சனம் செய்த பதிவையும் நடிகை ராணி சட்டர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகார் குறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.