இமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார்

இமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் (வயது 48). பல்வேறு வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர். பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்.

தமிழ் ரசிகர்களுக்கும் இவர் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். இவர் மீது நடிகை பாயல் கோஷ் (வயது 30) பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள பாயல் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அவர் காஷ்யப் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “கடந்த 2014-ம் ஆண்டில் படவாய்ப்புக்காக இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தேன்.

பாயல் கோஷ்
பாயல் கோஷ்

அப்போது அவர் ஆபாச திரைப்படத்தை ஓடச் செய்தார். என்னை மானபங்கம் செய்ய முயன்றார். அவருடைய ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக என் மீது பாய்ந்தார். நான் கெஞ்சி, கூத்தாடி அவரிடம் இருந்து தப்பித்தேன்.

இந்த கொடுமையை பல முறை பகிரங்கமாக கூறுவதற்கு முயற்சி செய்தேன். போலீஸில் புகார் செய்யவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனது வருங்காலத்தை கருதி தடுத்துவிட்டனர்.

உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காக இப்போது நடந்த சம்பவத்தை கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை இயக்குநர் அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ” என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனது குரலை ஒடுக்கும் வகையில் இத்தகைய புகார் கூறப்படுகிறது.

நான் 2 முறை திருமணம் செய்துள்ளேன். எனது மனைவிகளோ, காதலியிடம்கூட நான் தகாத முறையில் நடந்தது கிடையாது. என்னுடன் பணியாற்ற நடிகைகளுடன் கண்ணியமாகவே நடந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நடிகை பாயல் கோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் நடிகை பாயலுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான புகாரை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *